Saturday, October 30, 2010

காசி ஆனந்தன் கவிதைகள்- 1

காசி ஆனந்தன் கவிதைகள்

kasi-anandan3

சாமி..

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.


மந்தை..

மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா… நீ என்றேன்
கைதட்டினான்


உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.


வில்..

வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்..

காசி ஆனந்தன் கவிதைகள்



காசி ஆனந்தன் கவிதைகள்

தாயை 'இது -
உன் அம்மா
அல்ல
என் அம்மா'
என்றவனை

ஓங்கி
அறைந்தது
குழந்தை...

நீ
என்
தாய் மண்ணை
உன் தாய் மண்
என்றாய்...

அறைந்தேன்
இனியும்
அறைவேன்...

முள்ளிவாய்க்கால்
நெருப்பில் -

என்
தாய்க்குலத்தில்
பத்தாயிரம்
உயிர்களை
பாலியல்
நகங்களால்
கிழித்தெறிந்தாய்...

பூவும்
பிஞ்சும்
காயும்
கனியுமாய்
என்
தாய் மண்ணில்
நாற்பதாயிரம்
உயிர்களை
ஒரே நாளில்
சாம்பல்
ஆக்கினாய்...

உன்னிடம்
இல்லாத
புத்தனை
என்னிடம்
எப்படி
எதிர்பார்ப்பாய்?

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...

குண்டுகளால்
தாய்மார்
கருப்பை
கிழித்து
என்
தாய் மண்ணில்
ஈரிலக்கம்
உயிர்களை
அழித்த
நீ
என்னை
உன் வாயால்
வன்முறையாளன்
என்றாய்...

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...

உடல் கிழிந்த
தாயும்
ஊர் கிழிந்த
தாய் மண்ணுமாய்
நிற்கும்
என்னிடம்

இன்னுந்தான்
இன்னுந்தான்...

சிங்களவன்
மண்
இது
என்கிறாய்...

நீயும்
மாறப்போவதில்லை...
அதுவரை -
நானும்
மாறப்போவதில்லை...

அறைந்தேன்...
இனியும்
அறைவேன்...